வெளிநாட்டில் இறந்தவரின் உடலை கொண்டு வரவேண்டும் பெரம்பலூர் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு


வெளிநாட்டில் இறந்தவரின் உடலை கொண்டு வரவேண்டும் பெரம்பலூர் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு கீழக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி என்கிற பெண் தனது குடும்பத்தினருடன் 2-வது முறையாக வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில், எனது கணவரான சேகருக்கும்(வயது 58), எனக்கும் திருமணமாகி 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. எனது கணவர் சேகர் சவுதி அரேபியாவில் கடந்த சில வருடங்களாக கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி அங்கு சாலையை கடந்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் என்னுடைய கணவர் சேகர் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கடந்த 7-ந் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன்.

ஆனால் இதுவரை வெளிநாட்டில் உயிரிழந்த எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இறந்து ஒரு மாதம் ஆகப்போவதால் கணவரின் உடலை இன்னும் காணமுடியாமல் நானும், எனது மகள்களும், மகனும் துக்கத்தில் தவித்து கொண்டிருக்கிறோம். எனவே வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகா கரம்பியம் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு செல்லும் சாலையில் தற்போது புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் அந்த தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்தி விட்டனர். ஆனால் அரசு அதிகாரி ஒருவர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளார். இதுகுறித்து வட்டாட்சியரிடம் தெரிவித்தும், அவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கும் பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்களது கிராமத்தில் உள்ள ராமன் குட்டை, மார்க்காய்குளம், அம்பட்டன் குளம் ஆகிய நீர் நிலைகளை பொதுமக்களை சொந்த செலவில் தூர்வாரி வருகிறோம். எனவே அந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரியும், நீர் நிலைகளுக்கிடையே உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், நீர் நிலைகளை சுற்றி கரை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வின் இளைஞரணி செயலாளர் செல்வகுமார் கொடுத்த மனுவில், தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் வேப்பந்தட்டை தாலுகா அய்யர்பாளையம் கிராம மக்கள், அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் குடிநீரால் பொதுமக்களுக்கு சிறுநீரகத்தில் கோளாறு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதிக்கு டாக்டர்களை அனுப்பி மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அந்த கிணற்று தண்ணீரை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 326 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூரில் 6 தனியார் இ-சேவை மையங்களையும், பூலாம்பாடி மற்றும் லெப்பைக்குடிகாட்டில் தலா 2 தனியார் இ-சேவை மையங்களையும் நடத்துவதற்கான அனுமதி ஆணைகளை, அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story