கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எடியூரப்பா பரபரப்பு பேட்டி
கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்பதற்கு எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் விவசாயிகள், மக்கள் விரோத, துக்ளக் அரசு நடக்கிறது. பணியாளர்கள் இடமாறுதலில் மாநில அரசு கொள்ளையடித்து வருகிறது. நில சீர்திருத்த சட்டத்தில் சட்டவிரோதமாக அரசு நிலத்தை அபகரித்தவர்களிடம் இருந்து நிலத்தை கைப்பற்ற வேண்டும். ஆனால் 30, 40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கக்கூடாது. அவர்களுக்கே அந்த நிலத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.
கர்நாடகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்காமல், முதல்-மந்திரி குமாரசாமி, அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவர் ஒரு பொறுப்பற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதல்-மந்திரி.
81 தாலுகாக்களில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 62 தாலுகாக்களில் லேசான மழை பெய்திருந்தாலும் கூட குடிநீர் பிரச்சினை தீரவில்லை. 74.69 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 18.50 லட்சம் எக்டேர் நிலத்தில் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் ரூ.13 ஆயிரம் கோடி பாக்கியை ஒப்பந்ததாரர்களுக்கு இந்த அரசு வழங்க வேண்டியுள்ளது. கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊழியர்கள் நியமன பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு இன்னும் நியமன உத்தரவும் வழங்கப்படவில்லை.
ஐதராபாத்-கர்நாடக பகுதியில் அரசு துறைகளில் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1,758 கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. கர்நாடகத்தில் கபினி, ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி உள்பட பெரும்பாலான அணைகளில் தண்ணீர் மிக குறைவாக உள்ளன.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் நலன்களை இந்த அரசு புறக்கணித்துவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குமாரசாமி, ஆட்சிக்கு வந்தவுடனே ரூ.44 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
அவர் முதல்-மந்திரியாக ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இப்போது குமாரசாமி, ரூ.16 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தால் போதும் என்று சொல்கிறார். விவசாயிகளை அவர் ஏமாற்றிவிட்டார். விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. நான் ஏற்கனவே வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். மீண்டும் ஒரு முறை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளேன்.
இதற்கான தேதி நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும். வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,163 கோடி வழங்கியது. ஆனாலும் மத்திய அரசு மீது முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டுகிறார். சட்டசபையில் கர்நாடக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர மாட்டோம். அதற்கு பதிலாக சட்டமன்ற கூட்டத்தில் வறட்சி குறித்தும், அதனால் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் பேச நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story