புதிய பள்ளிக்கூடம் கட்ட வலியுறுத்தி, பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
நத்தம் அருகே புதிய பள்ளிக்கூடம் கட்ட வலியுறுத்தி பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சம்பைபட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குழந்தைகள் அதே பகுதியில் செயல்பட்ட தொண்டு நிறுவன நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பள்ளி திடீரென மூடப்பட்டது.
இதனால் அந்த பள்ளியில் படித்த மாணவர்கள், 2 கி.மீ. தொலைவில் உள்ள சமுத்திராப்பட்டி அரசு பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். தினமும் இந்த பள்ளி மாணவர்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் விபத்தில் சிக்கினாள்.
இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். சமுத்திராப்பட்டிக்கு செல்வதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் நேற்று மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பைபட்டியில் புதிதாக பள்ளிக்கூடம் கட்டும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story