காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா; கர்நாடக கூட்டணி அரசுக்கு நெருக்கடி
காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2018) மே மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. இருப்பினும் காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்–மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்–மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.
இதற்கிடையே மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதாவது ஆபரேசன் தாமரை திட்டம் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா முயற்சித்து வருகிறது. ஆனால் இதுவரை பா.ஜனதாவுக்கு அது பலன் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூட்டணி அரசுக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. அரசை தக்கவைக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ஒரு ரெசார்ட் ஓட்டலில் தங்க வைத்தது.
அங்கு தங்கியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஆனந்த்சிங், கணேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆனந்த்சிங் படுகாயமடைந்தார். அவர் பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அவரை தாக்கிய கணேஷ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கணேஷ் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு கணேஷ் சிறையை விட்டு வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில், அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை காங்கிரஸ் வாபஸ் பெற்றது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆனந்த்சிங், பல்லாரியில் ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யும் முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்தார். மாநில அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ., நேற்று திடீரென சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த தகவலை அவர் தெரிவித்தார். ஆனால் தனது அலுவலகத்திற்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்தார். இதனால் குழப்பம் நிலவியது. இதையடுத்து ஆனந்த்சிங், ராஜ்பவனுக்கு வந்து கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தின் நகலை வழங்கினார். கவர்னரை சந்தித்து பேசிய பிறகு ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நான் இன்று (அதாவது நேற்று) காலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளேன். ஆனால் எனது ராஜினாமா கடிதம் எனக்கு வந்து சேரவில்லை என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். அதனால் தான் எனது ராஜினாமா கடிதத்தின் நகலை கவர்னரை சந்தித்து கொடுத்தேன். தேவைப்பட்டால் மீண்டும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பேன்.
பல்லாரியில் ஜிந்தால் நிறுவனத்திற்கு மாநில அரசு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்தேன். அந்த நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் நிலத்தை வழங்க நான் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன்.
எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் நிலத்தை குத்தகைக்கு கொடுக்கட்டும். ஆனால் விற்பனை செய்வதை ஏற்க முடியாது. மாநில அரசின் முடிவு பல்லாரி மாவட்டத்திற்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நான் தனியாக போராடுகிறேன்.
கட்சி பேதங்களை மறந்து மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், மாநில அரசின் முடிவை எதிர்க்க வேண்டும். எனது ராஜினாமாவில் அரசியல் இல்லை. நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை. எனது மாவட்டத்திற்கு ஏற்படும் இந்த அநீதியை பார்த்து கொண்டிருக்க முடியாது. மேலும் எனது தொகுதியான விஜயநகரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
எனது இந்த கோரிக்கைகளை காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியுள்ளேன். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கிறேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நான் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன். இல்லாவிட்டால் எக்கா£ரணம் கொண்டும் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கமாட்டேன்.
நான் எந்த ‘ஆபரேசனுக்கும்‘ (பா.ஜனதாவின் ஆபரேசன் தாமரை திட்டம்) ஆளாகவில்லை. காங்கிரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. எனது மாவட்டம் சார்ந்த பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறேன். எங்கள் கட்சி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இவ்வாறு ஆனந்த்சிங் கூறினார்.
ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சியில் இருந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தான் காங்கிரசில் அவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து குமாரசாமி மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை ‘பேக்ஸ்‘ மூலம் சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் ராஜினாமா கடிதத்தை நேரில் தான் கொடுக்க வேண்டும், பேக்ஸ் மூலமோ அல்லது கடிதம் மூலமோ அனுப்பினால் விதிமுறைப்படி அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முடிவின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்வதற்கு முன்பு மத்திய ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை ஆனந்த்சிங் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் காங்கிரசை சேர்ந்த மகேஷ் குமடஹள்ளி, நாகேந்திரா உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் வரை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் கூட்டணி அரசு கவிழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்துள்ளவர்களில் ஆனந்த்சிங்கை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவரமாக முயற்சி செய்து வருகிறார்கள். இது தொடர்பாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வரை நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்–மந்திரி குமாரசாமி அங்கிருந்தபடியே அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சமாதான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் அவசரப்பட்டு பா.ஜனதாவுக்கு செல்ல வேண்டாம் என்றும், உரிய பதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
ஒரே நாளில் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.