நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க பொதுமக்கள் மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்


நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க பொதுமக்கள் மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 542 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முனசந்தை ஊராட்சி தெற்கு நல்லிப்பட்டி, இன்னாசியார்புரம், அய்யனார்புரம் கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் அனைவரும் பெருங்குடி கிராமத்திற்கு, கண்மாய் வழியாக சென்று அங்குள்ள அங்காடியில் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறோம். எனவே தெற்குப்பட்டி கிராமத்தில் அங்காடி அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் முனசந்தை ஊராட்சி தெற்கு நல்லிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 9ஏ என்ற அரசு டவுன் பஸ் காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தெற்கு நல்லிப்பட்டி, இன்னாசியார் புரம், அய்யனார்புரம், மேனாம்பட்டி, கணேஷ் நகர் ஆகிய பகுதியில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் காயத்ரி குமரேசன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகரின் மையபகுதியில் உள்ள புதுக்குளம் பூங்காவின் அருகே புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் குடியிருப்பு பகுதியில் உள்ள இயற்கையை அளித்து பெட்ரோல் பங்க் அமைக்கப்படுவதாகவும், இதற்காக அந்த பகுதியில் பூமி பூஜை போடப்பட உள்ளதாகவும், ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை நகரில் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. எனவே பெட்ரோல் பங்க் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கோல்டன் நகர் 1-ம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் 2, 3, 4 வீதிகள் மற்றும் கோல்டன் நகர், சிராஜ் நகர், டைமண்ட் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை முறையாக செலுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆவுடையார்கோவில் பனையவயல் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராம எல்லையில் உள்ள இடத்தை தலைமுறை தலை முறையாக நாங்கள் அனுபவித்து வருகிறோம். மேலும் அந்த இடத்தில் புத்தர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறோம். இந்நிலையில் துறையவயல் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 25-ந் தேதி புத்தர் கோவிலை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் கொட்டகை அமைக்க வந்தனர்.

அப்போது அவர்களிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்து விட்டோம். இந்நிலையில் 26-ந் தேதி சிலர் உங்களை இந்த இடத்தை விட்டு விரட்டாமல் விட மாட்டோம், புத்தர் கோவிலை கொளுத்திவிடுவேன் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புத்தர் கோவிலுக்கும், எங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

திருமயம் குளத்துப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு 2 காதுகளும் கேட்காது. எனது மனைவி சாரதாவிற்கு 2 கண்களும் தெரியாது. எங்களுக்கு என்று எந்த சொந்தமும் இல்லை. எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் குடியிருப்பதற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனகூறியிருந்தனர். மனு கொடுக்க வந்த ஆறுமுகம் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் அழுததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story