புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு: அலஞ்சிரங்காடு ஊராட்சி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை


புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு: அலஞ்சிரங்காடு ஊராட்சி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 July 2019 11:00 PM GMT (Updated: 1 July 2019 8:13 PM GMT)

அலஞ்சிரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளியில் மாணவர்களை அதிகமாக பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் தலைமை ஆசிரியர் பணிநிறைவு பெற்று சென்றுவிட்டதால் காலிப் பணியிடமாக இருந்தது. இந்த நிலையில் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். குடிதண்ணீர் வசதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் அறந்தாங்கி பகுதியில் சர்ச்சைக்குள்ளான ஒரு தலைமை ஆசிரியையை அலஞ்சிரங்காடு அரசு பள்ளிக்கு நியமனம் செய்ய இருப்பதை அறிந்த பெற்றோர்கள் சர்ச்சைக்குரிய தலைமை ஆசிரியை நியமனம் செய்ய கூடாது என்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு மனுவாக கொடுத்தனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையே பள்ளிக்கு பொறுப்பு ஏற்க வந்ததால் கடந்த வெள்ளிக் கிழமை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதே தலைமை ஆசிரியை வருவதாக தகவல் அறிந்த பெற்றோர்கள் 2-வது நாளாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது புதிய தலைமை ஆசிரியை பள்ளியை திறக்க வந்த போது பள்ளியை திறக்க கூடாது என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்ச்சைக் குரிய தலைமை ஆசிரியையை மாற்றிவிட்டு வேறு தலைமை ஆசிரியர் நியமனம் செய்யும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் உறுதியாக பேசினார்கள். அதன் பிறகு ஒரு மாதம் வரை மட்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை பணியில் இருப்பார். அவரின் செயல் பாடுகள் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக மாற்றப்பட்டு புதிய தலைமை ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story