நாகர்கோவில்-வாஞ்சி மணியாச்சி இடையே ரூ.1,114 கோடியில் இரட்டை ரெயில் பாதை 2¼ ஆண்டுகளில் முடிக்க திட்டம்


நாகர்கோவில்-வாஞ்சி மணியாச்சி இடையே ரூ.1,114 கோடியில் இரட்டை ரெயில் பாதை 2¼ ஆண்டுகளில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 1 July 2019 10:45 PM GMT (Updated: 1 July 2019 8:54 PM GMT)

நாகர்கோவில்-வாஞ்சி மணியாச்சி இடையே ரூ.1,114 கோடியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியை 2¼ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வரையும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரையும், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரையும் என 3 பிரிவுகளாக பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 70 முதல் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது.

நாகர்கோவில்-வாஞ்சி மணியாச்சி இடையே ரூ.1,114.62 கோடியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியை 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அதாவது 2¼ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொகையிலேயே நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நடைமேடை, விரிவாக்கப்பட்ட பணிமனை, ரெயில்கள் நிறுத்தும் இடம், குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என ரூ.100 கோடியில் முனையமும் அமைக்கப்பட உள்ளது.

இரட்டை ரெயில் பாதை பணிக்கு மாநில அரசு நிலங்களை ஒதுக்கி தர வேண்டும். அவ்வாறு ஒதுக்கியதும் நாகர்கோவில்-வாஞ்சி மணியாச்சி இரட்டை ரெயில் பாதை பணியை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வசதியாக இருக்கும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு ரெயில்வே அதிகாரி கைலாஸ்குமார் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

Next Story