சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி: 6 பேர் கமிட்டி விசாரணை


சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி: 6 பேர் கமிட்டி விசாரணை
x
தினத்தந்தி 2 July 2019 5:00 AM IST (Updated: 2 July 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து 6 பேர் கமிட்டி விசாரணை நடத்தும் என வருவாய் துறை மந்திரி கூறினார்.

மும்பை, 

புனே நகரில் உள்ள கோந்த்வா பகுதியில் தலாப் பள்ளிவாசல் அருகே குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இடத்தின் ஒரு ஓரத்தில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்த கூடாரங்களையொட்டி அமைக்கப்பட்டு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22 அடி உயர சுற்றுச்சுவர் கடந்த 29-ந் தேதி இடிந்து விழுந்தது. தொழிலாளர்களின் கூடாரங்கள் மீது அந்த சுவர் விழுந்து அமுக்கியது.

இதில் கூடாரத்தில் தங்கிருந்த பீகாரை சேர்ந்த 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த துயரத்துக்கு கனமழை ஒரு காரணமாக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவரின் பலவீனம் மற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் நடந்த கட்டுமான பணியில் அலட்சியம் ஆகியவை மற்றொரு காரணமாக அமைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இது தொடர்பான சர்ச்சை சட்டசபையில் எழுந்தது. அப்போது, இதற்கு பதிலளித்து வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேசியதாவது:-

புனேயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் மாவட்ட கூடுதல் கலெக்டர், தொழிலாளர் நல இயக்குனரக அதிகாரி, புனே போலீஸ் அதிகாரி, மாநகராட்சி அதிகாரி மற்றும் நகர திட்டமிடல் துறை துணை இயக்குனர், புனே மாவட்ட பொறுப்பு மந்திரி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறுகையில், ‘இடிந்து விழுந்த சுவரில் உள்ள குறைகள் குறித்து 4 மாதங்களுக்கு முன்பே உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்காது. 15 அப்பாவி மக்களின் உயிரிழப்பும் நேர்ந்திருக்காது. காயம் அடைந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிவாரண தொகை ரூ.25 ஆயிரத்தை மேலும் உயர்த்தி அறிவிக்கவேண்டும்” என்றார்.

Next Story