மதுக்கரையில் கல்லுக்குழியில் மூழ்கி, அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பரிதாப சாவு
கோவையை அடுத்த மதுக்கரையில் கல்லுக்குழியில் மூழ்கி, அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கோவையை அடுத்த மதுக்கரை காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவப்பிரகாஷ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன்கள் கார்த்தி (9). தினேஷ் (8). சிவப்பிரகாஷ், கார்த்தி மற்றும் தினேஷ் ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்து வந்தனர்.
சிவப்பிரகாஷ் உள்பட 3 சிறுவர்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாட போவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு சென்றனர்.
அங்கு சிறிது நேரம் விளையாடிய சிறுவர்களுக்கு அருகில் இருந்த கல்லுக்குழியில் இருந்த தண்ணீரை பார்த்ததும் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 75 அடி ஆழமுள்ள அந்த கல்லுக்குழியில் இறங்கி செல்வதற்கு சரிவான பாதை உள்ளது. அதன் வழியே சிறுவர்கள் 3 பேரும் தட்டுத் தடுமாறி சென்றனர்.
கல்லுக்குழியில் இறங்கியதுமே அவர்கள் 3 பேரும் மூழ்கி விட்டனர். விளையாட சென்ற சிறுவர்கள் இருட்டிய பிறகும் வீட்டுக்கு திரும்பாததை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரிவித்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிறுவர்கள் வழக்கமாக விளையாடும் மைதானத்துக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. அக்கம்பக்கத்திலும் தேடி பார்த்தனர். அவர்களை காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அருகில் உள்ள கல்லுக்குழியில் இறங்கி குளிக்க சென்றிருப்பார்களோ என்று அங்கு சென்று பார்த்தனர். அதற்குள் இருட்டி விட்டது. இதற்கிடையில் கல்லுக்குழியில் கார்த்தியின் உடல் மிதந்தது. அதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் உதவி மீட்டனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கார்த்தியின் தம்பி தினேஷின் உடலை மீட்டனர். இதற்கிடையில் சிவப்பிரகாஷ் உடல் ஆழமான பகுதிக்கு சென்று விட்டது. மேலும் இரவு நேரம் ஆகிவிட்டதால் சிவப்பிரகாஷ் உடலை மீட்க முடியவில்லை. ஆனாலும் விளக்கு மற்றும் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 2 சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கல்லுக்குழியை சுற்றிலும் கம்பி வேலி போட சொல்லி அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story