பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, நீலகிரியை தூய்மை மாவட்டமாக உருவாக்க வேண்டும் - திரைப்பட நடிகர் விவேக் பேச்சு
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நீலகிரியை தூய்மை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று திரைப்பட நடிகர் விவேக் பேசினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, திரைப்பட நடிகர் விவேக் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்கள் சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விவேக் பேசியதாவது:-
நீலகிரி மிகவும் பசுமை நிறைந்த மாவட்டம் ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது சமுதாயத்தில் இன்றைய தலைமுறையினருக்கு முக்கிய பங்கு உள்ளது. நீங்கள் நினைத்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு நீலகிரியை பசுமையுடனும், சுற்றுலா தலமாகவும் வைத்திருக்க முடியும். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து, தூய்மை காவலரிடம் கொடுக்க வேண்டும்.
மக்கும் குப்பைகளை வீட்டு தோட்டத்திற்கு உரமாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நீலகிரியை தூய்மை மாவட்டமாக உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்த்து புற்றுநோயில் இருந்து விடுபடவும், வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் மூலம் நோயில்லா சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டும். இதனால் முழு சுகாதாரத்தில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பதன் மூலம் மண் வளம், மாசற்ற காற்று, மழை மற்றும் நீர்வளத்தை பெற இயலும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சுரேஷ், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story