பொள்ளாச்சியில், 4 டயரில் ஓடிய அரசு பஸ் - சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் 4 டயரில் ஓடிய அரசு பஸ் குறித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வழக்கமாக பஸ்களின் முன்புறம் 2 டயர்களும், பின்புறம் மட்டும் 4 டயர்களும் சேர்த்து மொத்தம் 6 டயர்கள் இருக்கும். ஆனால் அந்த பஸ்சில் பின்புறம் 4 டயருக்கு பதிலாக, 2 டயர்கள் மட்டுமே இருந்தன. மேலும் பஸ்சில் பின்புறம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்வதாக எழுதப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக காரில் சென்ற சிலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் டயர் கூட சரிவர பொருத்தமுடியாத நிலைக்கு போக்குவரத்து கழகம் நலிவடைந்து விட்டதா? என்று பேசிக்கொண்டனர். சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்தனர். வீடியோவில் அரசு பஸ்சின் பின்புறம் 2 டயர்கள் மட்டும் உள்ளதாக பேசி சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் பி 3 கிளை மூலம் திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்படும் டி.என். 38 1419 பதிவு எண் கொண்ட அரசு பஸ் மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். காமநாயக்கன்பாளையம், சோமனூர், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே பஸ் கொண்டு செல்வது தொடர்பாகவும், எந்த வழியாக பஸ் செல்கிறது என்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. பஸ்சின் இடது மற்றும் வலதுபுறங்களில் தகடுகள் ஏற்கனவே பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ எடுத்த நபர்கள் பஸ்சில் பயணிகள் இருக்கிறார் களா? என்பதை பார்க் காமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story