கிராமப்புறங்களில், அனுமதியற்ற 26 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - அதிகாரி தகவல்
கடலூர் மாவட்ட கிராமப்புறங்களில் அனுமதியற்ற 26 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கோடையின் காரணமாக வறட்சி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு விட்டதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே கிராமப்புறங்களி்ல் உள்ள குடிநீர் இணைப்புகளில் திருட்டுத்தனமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுகிறவர்களை கண்டுபிடித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்யுமாறும், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளிலும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை கண்டுபிடித்து துண்டிக்கும் பணி நடைபெற்றது. அதேப்போல் குடிநீர் இணைப்புகளில் திருட்டுத்தனமாக பொருத்தப்பட்ட மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.இது பற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் வரை 25 ஆயிரத்து 915 அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 1,254 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்றார்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளில் கிராம ஊராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார்கள் எத்தனை?
அவற்றை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பத்திரமாக வைத்துள்ளனரா? அல்லது பொது ஏலத்தில் விற்று, பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளனரா? அல்லது அவை மாயமாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story