குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 2 July 2019 4:00 AM IST (Updated: 2 July 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்திப்பட்டி ஊராட்சி பெத்தம்மாள்நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காலி குடங்களுடன் வந்திருந்த பெண்கள் கூறியதாவது:-

ஆத்திப்பட்டி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தண்ணீர் வருகிறது. இதனை எங்கள் பகுதிக்கென்று ஒரு பொதுக்குழாய் அமைத்து தாமிரபரணி குடிநீர் தர வேண்டும் என பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்க பெற்ற தண்ணீரும் கிடைக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் எங்கள்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

பின்னர் கோரிக்கை மனுவை அலுவலகத்தில் கொடுத்து விட்டு அனைவரும் திரும்பிச்சென்றனர்.

இதே போன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். அண்ணாத்துரை, முத்திருளன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு பூங்கோதை, மாவட்ட செயற்குழு முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காந்திநகர், ஆத்திப்பட்டி, செம்பட்டி பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், ஜெயராம் நகர் பகுதியில் தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், பாலையம்பட்டி மற்றும் விரிவாக்கப்பகுதி, பாலவநத்தம், பந்தல்குடி ஆகிய கிராமங்களில் குழாய்களில் பழுதடைந்துள்ள நல்லிகளை சீரமைக்க வேண்டும், தூர்ந்து போன அடி குழாய்களை சீரமைப்பதோடு, குல்லூர் சந்தை கிராமத்தில் பழுதடைந்துள்ள குடிநீர் இணைப்புகளை சீரமைக்கவேண்டும், பாலவநத்தம் பெரிய கண்மாயிலிருந்து தனியார் நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதால் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story