திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 2 July 2019 4:55 AM IST (Updated: 2 July 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருமுருகன்பூண்டி 4 மற்றும் 7-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கைவினை கலைஞர்களால் கல் சிற்ப கலைக்கூடங்கள் பல இயங்கி வருகின்றன. இந்த சிற்ப கலைக்கூடங்களில் முன்பெல்லாம் உளி, சுத்தியல் கொண்டு சிலைகளை வடிவமைத்து வந்தார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன எந்திரங்களை பயன்படுத்தி கற்களை அறுப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதுடன், மெயின் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இவை ஊரின் மையப்பகுதியில் அமைத்திருப்பதால் காற்று மாசுபடுவதால், சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மேலும், இரைச்சலால் சுற்றுப்பகுதி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதியடைகிறார்கள். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அதன்படி சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு விரைவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

அவினாசி அருகே ராக்கியாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “எங்கள் பகுதியில் பல தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். ராக்கியாபாளையம், உம்மஞ்செட்டிபாளையம் கிராமங்களுக்கும், கோவில்களுக்கு வேண்டிய மண்பாண்ட சிலைகளும், மண்பாண்ட பொருட்களும் செய்து கொடுத்து வருகிறோம். எனவே எங்களது பகுதியில் உள்ள இடத்தில் மண்பாண்டங்கள் உலர வைக்கவும், சூளை முழுவதும் அதற்கு தேவையான எரிபொருட்களை சேமித்து வைக்கவும் அந்த இடத்தை பல காலங்களாக பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தண்டுக்காரன்பாளையம் ராமியம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “அவினாசி வட்டம் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் உள்ள ராமியம்பாளையத்தில் குடியிருப்பு அருகில் புதியதாக அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஏனெனில் அப்பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதி மற்றும் அன்னமார் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் சென்று வருவார்கள். மழைக்காலங்களில் அக்குழியில் தண்ணீர் நிரம்பி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தொற்றுநோயும் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடியிருப்பு இல்லாத மாற்று இடத்தை தேர்வு செய்து குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றிருந்தனர்.

சாமளாபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளபாளையம் 2-வது வார்டு ராசுவாய்க்கால் மேடு வீதியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் 30 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீட்டை காலி செய்யுமாறு மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றிருந்தனர்.

பெருமாநல்லூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த தெய்வராணி என்பவர் கொடுத்த மனுவில் “ சந்தைப்பேட்டையில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்களது பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி தேங்கி நிற்கிறது. இதனை சீராக செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி நிற்பதால் இதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றிருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த ஒரு மனுவில், “ராயபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரின் டிரைவர் என்பவர் அந்த விடுதியில் தங்குகிறார்.

மேலும், மாணவர்கள் தங்கும் அறையை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். மாணவர்களை தன் சொந்த வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றிருந்தனர்.


Next Story