தென்காசியில் முதல்–அமைச்சர் முன்னிலையில் 6–ந் தேதி விழா: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்


தென்காசியில் முதல்–அமைச்சர் முன்னிலையில் 6–ந் தேதி விழா: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்
x
தினத்தந்தி 3 July 2019 3:00 AM IST (Updated: 2 July 2019 8:07 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வருகிற 6–ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் முன்னிலையில் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்.

தென்காசி,

தென்காசியில் வருகிற 6–ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்.

பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்சில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்ந்த மாபெரும் இயக்கத்தில் 2011–ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா என்னை அம்பை தொகுதியில் அடையாளம் காட்டினார். அம்பை தொகுதியில் மக்களால் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினரானேன். ஆனால் 2009–ம் ஆண்டு என்னை அடையாளம் காட்டியதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறார். சில வி‌ஷயங்களை சொல்லிக் காட்டுவது நாகரிகமாக இருக்காது.

எங்களது பரம்பரை தொழில் காண்டிராக்ட் தொழில்தான். 70 கோடி ரூபாய் அரசுக்கு நான் பாக்கி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதுதான் அவரிடம் அறையில் சொன்ன வி‌ஷயம். இதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல. தொழில் நடத்துபவர்களுக்கு இதெல்லாம் சகஜம். அந்த பணத்தை திருப்பிக் கொடுப்பது நான் பார்த்துக் கொள்வேன். என்னை சுய லாபம் பார்ப்பதாக கூறியுள்ளார். அவ்வாறு சுயநலம் பார்த்திருந்தால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இருந்திருக்க மாட்டேன்.

அ.தி.மு.க.வில் இணைகிறேன்

நான் அ.தி.மு.க.வில் இணைகிறேன் என்று கூறியதும் முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் நீங்கள் இங்கு வர வேண்டாம். நாங்கள் உங்கள் இடத்திற்கு வருகிறோம் என்று பெருந்தன்மையுடன் கூறி உள்ளார்கள். நான் சென்றபோது என்னை அன்புடன் வரவேற்றார்கள். முன்பு ஒருமுறை இதே இடத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தொண்டர்களின் ஆதரவு கேட்டு முடிவெடுப்பதாக கூறினோம். தற்போது அவர்கள் தாய் கழகத்திற்கு போகலாம் என்று கூறி விட்டார்கள். அந்த அடிப்படையில் வருகிற 6–ந் தேதி (சனிக்கிழமை) தென்காசி இசக்கி மஹால் திருமண மண்டபத்தில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது.

இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வில் இணைகிறேன். டி.டி.வி. தினகரன் கூறியது போல சுயநலம் பார்த்தால் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கலாம். என்னை ஆதரித்த தொண்டர்களின் எண்ணத்தின்படி அ.தி.மு.க.வில் இணைகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நான் விலகவில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். வேறு தனிபட்ட எந்த கருத்து வேறுபாடும் எனக்கு கிடையாது. அ.ம.மு.க.வில் இருந்து பலர் இணைந்த பிறகு தான் நான் இப்போது இணைகிறேன். மேலும் பலர் அ.ம.மு.க.வில் இருந்து விலகி வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், அ.ம.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபுத்திரன், ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றாலம் என்.சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story