கெத்தையில், மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
கெத்தையில் மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, கெத்தை பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த 1960-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தையில் மின்வாரிய பொறியாளர்களின் குழந்தைகள், தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பலர் கல்வி படிப்பை பயின்று உள்ளனர். இங்கு படித்தவர்கள் இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேல்கெத்தையில் இருளர் இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின் றனர். விவசாயம் மற்றும் வேலி வேலை செய்யும் ஏழை மக்கள் உள்ளனர். அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர நடுநிலைப்பள்ளியாக அது தரம் உயர்த்தப்பட்டது.
மின்வாரிய ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியில் படித்து வந்ததால், பள்ளியை மூடினால் மின்வாரிய வாகனம் மூலம் குழந்தைகளை மஞ்சூர் தனியார் பள்ளிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருந்தாலும், மின்வாரியம் ஆசிரியர்கள் தங்க குறைந்த வாடகையில் குடியிருப்பும் வழங்கி இருந்தது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி கெத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக கீழ்குந்தா அரசு பள்ளியுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பு நோட்டீஸ் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி வீடு, வீடாக சென்று மாற்றுச்சான்றிதழ் வழங்கியதுடன், கெத்தை பள்ளி மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு படித்து வந்த 4 பேர் கோவை மாவட்டம் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் அரசு பஸ்சில் ஓணிகண்டி பகுதியில் இறங்கி, அங்கிருந்து பள்ளிக்கு சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தனர்.
அந்த பஸ் அவ்வப்போது வராததால், சில குழந்தைகள் படிப்பை இடையிலேயே நிறுத்தினர். கிண்ணக்கொரை, தாய்சோலை, கரியமலை ஆகிய கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாணவர்களை கொண்டு பள்ளிகள் இயங்குகிறது. ஆனால், கெத்தை பள்ளி மூடப்பட்டதால் பெற்றோர்களும், குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, மூடப்பட்ட கெத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியை திறந்தால் மஞ்சூர் தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மீண்டும் இங்கு வந்து விடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story