கலெக்டரின் அனுமதி கடிதத்தை போலியாக தயாரித்து, மர வியாபாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு; ஏஜெண்டு கைது
கலெக்டரின் அனுமதி கடிதத்தை போலியாக தயாரித்து மரங்கள் வெட்டி தருவதாக உடுமலைபேட்டை மர வியாபாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர், அந்த பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் அவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், தேனி மாவட்டம் பெரியபாளையம் தென்கரையை சேர்ந்த ஏஜெண்டு ரியாஜ்தீன் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.
அப்போது ராதாகிருஷ்ணனுக்கு கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியில் தோட்டம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த தோட்டத்தில் இருக்கும் பலா மற்றும் சில்வர்ஒக் மரங்களை வெட்டி விற்பனை செய்ய உள்ளதாக கூறினர். இதற்காக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கடிதம் பெற்று விட்டதாகவும் தெரிவித்தனர். அதோடு கலெக்டர் கையெழுத்திட்ட அனுமதி கடிதத்தை காண்பித்தனர்.
அதை உண்மை என நம்பி அவர்களிடம் மரங்களை வாங்குவதற்காக ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் பேசியபடி மரங்களை வெட்டி தரவில்லை. இதனால் நான் பணத்தை திரும்ப கேட்ட போது, மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே மரங்களை வெட்டுவதற்கு வாங்கியதாக அவர்கள் கூறிய, கலெக்டர் அனுமதி கடிதமும் போலி என்பது தெரியவந்தது. கலெக்டரின் கையெழுத்தை போட்டு போலியாக அனுமதி கடிதம் தயாரித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனு குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து ராதாகிருஷ்ணன், ரியாஜ்தீன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ரியாஜ்தீனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story