தியாகதுருகம் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கலெக்டர் ஆய்வு
தியாகதுருகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தியாகதுருகம்,
ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், சாலை மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஊரக பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவேண்டும், பெரிய அளவில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திட வேண்டும். மின் மோட்டார் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு போன்றவற்றை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும், குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீதும், குடிநீரை விளை நிலத்துக்கு பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தியாகதுருகம் அருகே பானையங்கால் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி கிணற்றையும், விளக்கூரில் ரூ.7 லட்சம் செலவில் ஆழப்படுத்தப்படும் கிணற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விளக்கூர் முதல் கொங்கராயப்பாளையம் வழியாக சித்தலூர் வரை அமைக்கப்பட்ட தார் சாலையையும் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதில் கள்ளக்குறிச்சி உதவி இயக்குனர் ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வி.கணேசன், துரைசாமி, உதவி பொறியாளர்கள் அசோக்காந்தி, ஜெயந்தி, காந்திமதி, உதவி செயற்பொறியாளர்கள் புஷ்பராஜ், இளங்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையத் முகமது, ஜெகநாதன், பணி மேற்பார்வையாளர்கள் முத்துராமன், பச்சைமுத்து, குரு, பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதம்மாள் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story