வீட்டிற்குள் உல்லாசமாக இருந்தபோது வெளிப்புறமாக பூட்டிவிட்டதால் அவமானம்; கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
மைசூருவில், வீட்டிற்குள் உல்லாசமாக இருந்தபோது வெளிப்புறமாக பூட்டிவிட்டதால் அவமானமடைந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு,
மைசூரு டவுன் ரமாபாய் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் சந்தோஷ் குமார்(வயது 34). இவருடைய மனைவி அர்ச்சனா. இதேபோல், மைசூரு டவுன் ஜே.பி.நகரை சேர்ந்தவர் சித்தராஜு. இவருடைய மனைவி சுமித்ரா(35). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் குமார் ஜே.பி.நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.
அவர் வேலைக்கு சென்று வரும்போது அவருக்கும், சுமித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. அவர்கள் இவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தனர். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் குமார், தனது கள்ளக்காதலியுடன் வெளியூருக்கு ஓடிவிட்டார். இதையடுத்து இருவீட்டாரின் குடும்பத்தினரும் அவர்களை தேடிச்சென்று கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்கள், சந்தோஷ் குமாரையும், சுமித்ராவையும் அங்கிருந்து மைசூருவுக்கு அழைத்து வந்தனர். அதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி இருவரையும் பிரித்து அவரவர் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.
இருப்பினும் சந்தோஷ் குமாரும், சுமித்ராவும் தங்களுடைய கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையறிந்த சுமித்ரா, தனது கள்ளக்காதலன் சந்தோஷ் குமாரின் வீட்டிற்கு வந்தார். அதையடுத்து இருவரும் அங்கு உல்லாசம் அனுபவித்தனர். பின்னர் சுமித்ரா தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கினார்.
இதுபற்றி அறிந்த அர்ச்சனா நேற்று காலையில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பி கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த அவர், வீட்டிற்குள் தனது கணவரும், அவருடைய கள்ளக்காதலியும் உல்லாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் வீட்டை வெளிப்புறமாக பூட்டினார். மேலும் இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடமும், மைசூரு புறநகர் போலீசாரிடமும் தெரிவித்தார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசாரும் அங்கு வந்தனர். அதுமட்டுமல்லாமல் சுமித்ராவின் கணவர் சித்தராஜுவும் அங்கு வந்துவிட்டார்.
இதனால் வசமாக சிக்கிக் கொண்ட கள்ளக்காதல் ஜோடியான சந்தோஷ் குமாரும், சுமித்ராவும் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் அவமானத்தால் மனமுடைந்தனர். அதுமட்டுமல்லாமல் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தனர்.
பின்னர் இருவரும் வீட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டனர். அதையடுத்து இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் வெகுநேரமாகியும் திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது வீட்டில் சந்தோஷ் குமாரும், அவருடைய கள்ளக்காதலி சுமித்ராவும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
அவமானத்தால் அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் குமார் மற்றும் சுமித்ராவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.