கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்


கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆற்றில் யாகம் நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திருவானைக்காவல் சோதனை சாவடி அழகிபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருகிறது. இதை கண்டித்தும், நிலத்தடிநீர் மாசுப்படுவதை தடுக்க வேண்டும். ஆற்றில் குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று யாகம் வளர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு முத்து, கணேசன் ஆகியோர் தலைமைதாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாநகர் மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கிச்சான், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் சந்துரு, சுப்பிரமணியன், லோகநாதன், கண்ணா, லெட்சுமணன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, அவர்கள் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவது தெரியவந்தது. உடனே, போலீசார், அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக உங்களை கைது செய்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், மக்களின் நலனுக்காக போராடும் இவர்களை கைது செய்யக் கூடாது. அப்படி கைது செய்யவேண்டும் என்றால் எங்களையும் கைது செய்யுங்கள் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் ஆணையர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட இளநிலை பொறியாளர் பாலமுருகன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கொள்ளிடம் ஆற்றில் குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை ஒருவாரத்திற்குள் அகற்றுவது, சாக்கடை நீரில் மிதக்கும் குப்பைகளை உடனே அகற்றி, கொசு மருந்து அடிப்பது. கழிவு நீர் பிரச்சினைக்கு 2 மாத காலத்தில் நிரந்தர தீர்வு காண்பது என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story