பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சின்னக்கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சோமையா விளக்கவுரை அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களுக்கு தட்டுப்பாடுயின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்து வாரிகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் போன்றவைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். வறண்டு கிடக்கும் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் ராமன், மீரா மொய்தீன், ஆறுமுகம் உள்பட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது உள்ள குடிதண்ணீர் பிரச்சினையை உடனே சரிசெய்ய வேண்டும். அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். கிராம பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல் படுத்த வேண்டும். அறந்தாங்கி ஒன்றியத்தில் சேதம் அடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் தனலெட்சுமி, நகர செயலாளர் பெரியசாமி, தண்டாயுதபாணி, சரவணமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story