சேலத்தில் இரும்பு கடையில் ரூ.48½ லட்சம் மோசடி - ஊழியர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


சேலத்தில் இரும்பு கடையில் ரூ.48½ லட்சம் மோசடி - ஊழியர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2019 9:36 PM GMT (Updated: 2 July 2019 9:36 PM GMT)

சேலத்தில் இரும்பு கடையில் ரூ.48½ லட்சம் மோசடி செய்த ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 53). தொழிலதிபரான இவர் தாரமங்கலம் அருகே சிமெண்டு மற்றும் இரும்பு மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்பாலை அருகே உள்ள கணபதி பாளையத்தில் புதிதாக இரும்பு கடை திறந்தார்.

இந்த கடைக்கு பொறுப்பாளராக கருக்கல்வாடியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை செல்லப்பன் நியமித்தார். இதனிடையே கடையில் உள்ள பொருட்களின் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

அப்போது அதில் போலி கணக்கு எழுதி ரூ.48 லட்சத்து 62 ஆயிரத்து 396 மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடியில் ஸ்டீபன், அவருடைய தாய் தங்கம்மாள் மற்றும் நாச்சிமுத்து, ஆட்டோ டிரைவர் சிவா உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து இரும்பாலை போலீஸ் நிலையத்தில் செல்லப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஸ்டீபன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story