பொக்லைன் எந்திரத்தின் உதிரிபாகம் விழுந்து மெக்கானிக் உடல் நசுங்கி பலி - 2 பேர் படுகாயம்


பொக்லைன் எந்திரத்தின் உதிரிபாகம் விழுந்து மெக்கானிக் உடல் நசுங்கி பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 July 2019 3:22 AM IST (Updated: 3 July 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பொக்லைன் எந்திரத்தின் உதிரிபாகம் விழுந்து மெக்கானிக் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேட்டூர்,

மேட்டூர் அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியில் ஒரு தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு கற்களை வெட்டி எடுக்க பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வந்தனர். பொக்லைன் எந்திரம் பழுதடைந்ததால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த மெக்கானிக் சீலான் (வயது 37) என்பவர் வந்தார். அவருக்கு உதவியாக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த மோகன் (25), செல்வம் (15) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் பொக்லைன் எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்திரத்தின் உதிரிபாகமான மண் அள்ளும் பகுதியை தூக்கி நிறுத்தி இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அதற்கு அடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் அள்ளும் பகுதி தீடீரென்று அவர்கள் 3 பேர் மீதும் விழுந்தது. இதில் அவர்கள் உடல் நசுங்கி படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சீலானை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீலான் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மோகன், செல்வம் ஆகியோர் மேட்டூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story