வெள்ளகோவில் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


வெள்ளகோவில் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 July 2019 10:31 PM GMT (Updated: 2 July 2019 10:31 PM GMT)

வெள்ளகோவில் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளகோவில்,

கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூலம் வெள்ளகோவில், மேட்டுப்பாளையம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்ட குடிநீர் குழாய்களில் முத்தூர் அருகில் மேட்டுக்கடை, வெள்ளகோவில் என 2 இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேட்டுப்பாளையம் பக்கமுள்ள மாந்தபுரத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகிலுள்ள விவசாயக்கிணறுகளில் லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இது தடை செய்யப்பட்டு, தற்போது மீண்டும் குடிநீருக்காக லாரிகளில் தண்ணீர் எடுக்க தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் அனுமதி வழங்கியுள்ளார்.

மேட்டுப்பாளையம் ஊராட்சி வேப்பம்பாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் பழைய எந்திர ஆயில்கள் மற்றும் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் 2 தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரியும், மாந்தபுரத்தில் லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடை விதிக்கக்கோரியும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆர்.வி.சுதர்சன் தலைமை வகித்தார். வேப்பம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மு.ஜெயபாலன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களில் குடிநீர் கிடைக்கவும், மற்ற கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படுமெனவும் உறுதி கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டாங்காட்டுவலசு, பு‌‌ஷ்பகிரி நால்ரோடு, வள்ளியரச்சல் வழியாக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.


Next Story