திருப்பத்தூர், ஆம்பூரில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ, மாணவிகள் மறியல்


திருப்பத்தூர், ஆம்பூரில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ, மாணவிகள் மறியல்
x
தினத்தந்தி 3 July 2019 4:26 AM IST (Updated: 3 July 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பள்ளி மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அதேபோல் ஆம்பூரிலும் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் உள்ள மேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் இதே பள்ளியில் தொழிற்கல்வி பாடம் படிக்கும் 49 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் மடிக்கணினி கிடைக்காத மாணவிகள், அவர்களது பெற்றோருடன் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவிகளை சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது “இந்த பள்ளி அரசு நிதியுதவி பள்ளியாக இருந்தாலும் நீங்கள் எடுத்திருக்கும் பாடப்பிரிவுக்கு பள்ளி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகிறது. இப்போதைய சூழ்நிலையில் அரசு மூலம் இந்த பிரிவுக்கு மடிக்கணினி வழங்க முடியாத நிலை உள்ளது.

எனினும் உங்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்பி தெரிவிக்கிறோம். உங்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி வந்தால் உடனடியாக தருகிறோம்” என்றனர். அதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த சுமார் 300 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்கக்கோரி திடீரென அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகமும், ஆம்பூர் டவுன் போலீசாரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story