தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று போலீஸ்காரர் மனைவி தற்கொலை திருமணமான 1½ ஆண்டில் விபரீதம்


தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று போலீஸ்காரர் மனைவி தற்கொலை திருமணமான 1½ ஆண்டில் விபரீதம்
x
தினத்தந்தி 3 July 2019 5:15 AM IST (Updated: 3 July 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் பொய்கை அருகே உள்ள சத்தியமங்கலம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் பவித்ரா (வயது 21). இவருக்கும் ஆற்காடு மேலகுப்பத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் போலீஸ்காரர் சுரேசுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் ஜார்க்கண்ட்டில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பவித்ரா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷ்வா என பெயரிட்டனர். 7 மாத குழந்தையான விஷ்வாவை பவித்ரா, சுரேஷ் ஆகியோர் பாசமாக வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 30-ந் தேதி அன்று பவித்ராவின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். மாலை 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பவித்ரா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை அவர்கள் தேடி பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் பவித்ராவின் தாயார் விஜயராணி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சிவச்சந்திரன், பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற பவித்ரா அங்கேயே இருந்துள்ளார். விடுமுறைக் காக கடந்த 29-ந் தேதி ரெயிலில் சுரேஷ் தனது மனைவி, குழந்தையை பார்க்க வந்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மறுநாள்(30-ந் தேதி) பவித்ரா குளியல் அறையில் உள்ள சிமெண்டு தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை மூழ்கடித்து கொன்று, படுக்கை அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் வீடு வந்து சேர்ந்த அவர் மனைவி-குழந்தையை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால், இந்த சம்பவம் குறித்து வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் விசாரணை நடத்தி வருகிறார். காவல்துறை தரப்பிலும் பவித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story