போலி விசா கொடுத்து, 36 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய வாலிபர் கைது - போலீஸ் ஏட்டு என்று ஏமாற்றியது அம்பலம்


போலி விசா கொடுத்து, 36 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய வாலிபர் கைது - போலீஸ் ஏட்டு என்று ஏமாற்றியது அம்பலம்
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

போலி விசா கொடுத்து 36 பேரை வெளிநாட்டுக்கு அனுப்பிய போலி போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சமீபத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரஷியாவில் தங்கியிருந்த கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 36 பேர் மீட்கப்பட்டனர். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தலையீட்டின் பேரில் அவர்கள் பத்திரமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 28) என்பவர்தான் அவர்கள் அனைவரையும் ரஷியாவிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ரஷியாவில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த வடவாத்தி கிராமத்தை சேர்ந்த பிரபு (20) என்பவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

அதில், “ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சிவகங்கையில் போலீஸ் ஏட்டுவாக பணிபுரியும் முத்துக்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

முத்துக்குமார் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலையும் செய்து வந்ததால், அவரிடம் ரஷிய நாட்டில் வேலைக்குசெல்வதற்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். என்னைப்போல் பலரும் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்று கொண்ட அவர் போலி விசாவை கொடுத்தார். அதன் மூலம் ரஷியாவிற்கு சென்று, அங்கு போலீசிடம் சிக்கி தவித்தோம். பின்னர் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தலையிட்டு மீட்டு வந்தார்“ என்று கூறப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழிவர்மன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைச்சாமி, மைக்கேல், சங்கர், ஏட்டு திருமுருகன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிங்கம்புணரியில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணிபுரிந்த முத்துக்குமார் ரஷியாவிற்கு ஆட்களை அனுப்பியது தெரியவந்தது. மேலும் அவர் போலீஸ் ஏட்டு என்று போலியாக அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Next Story