கடலூரில், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயராமல் பாதுகாத்து வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல்பட நிதி உதவி வழங்க வேண்டும். நிதி சிக்கலை காரணம் காட்டி ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களை பட்டினி போடாதே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதற்கு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் பழனி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உண்ணாவிரதத்தில் ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் கருணாவேல், சுந்தரம் மற்றும் ஊழியர் சங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வேல்முருகன், வெங்கடேஷ், ஜெயராஜ், குருசாமி, ஜோதி, சிவசங்கர் உள்பட கடலூர், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இன்று (புதன்கிழமை) கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதி நிர்வாகிகளும், நாளை (வியாழக்கிழமை) கடலூர், நெய்வேலி போன்ற பகுதி நிர்வாகிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற உள்ளதாக மாவட்ட செயலாளர் சம்பந்தம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story