அந்தியூர் அருகே தண்ணீருக்காக தவிக்கும் கிராம மக்கள்


அந்தியூர் அருகே தண்ணீருக்காக தவிக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 3 July 2019 5:10 AM IST (Updated: 3 July 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தண்ணீருக்காக கிராம மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள கிழக்கு மாத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்பவர்கள். கிழக்கு மாத்தூர் பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது இதில் தண்ணீர் வற்றி விட்டதால் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் 4 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கி வந்தனர். அதுவும் தற்போது மிகவும் குறைவான நேரம் மட்டுமே வினிகோகிக்கின்றனர். அந்த தண்ணீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை. அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் செல்லக்கூடிய குழாயில் கசியும் தண்ணீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. அவற்றை அப்பகுதி கிராம மக்கள் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது ‘குழாயில் கசியக்கூடிய தண்ணீர் குட்டையில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. அந்த தண்ணீரை எடுத்து சென்று வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் எடுப்பதற்காக தினமும் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் செலவிடுகிறோம். அதனால் நாங்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகளும் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே கிழக்கு மாத்தூரிலேயே புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். தேங்கியுள்ள குட்டையில் தண்ணீர் எடுத்து, பெண்கள் தங்கள் தலையில் குடங்களை வைத்துக்கொண்டு நடந்தும், ஆண்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளிலும் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சென்று வருகிறோம். சில நேரங்களில் அங்கு குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரில் கால்நடைகளும் வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story