நண்பரின் மோட்டார்சைக்கிளை நூதன முறையில் திருடிய கல்லூரி மாணவர் பணம் கேட்டபோது சிக்கினார்
புதுவையில் நண்பரின் மோட்டார்சைக்கிளை நூதன முறையில் திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை திருவண்டார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 19). இவர் புதுவையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்த செல்வகணபதியும் (19), பிரகாசும் நண்பர்கள் ஆவார்கள்.
அவர்கள் இருவரும் அடிக்கடி சேர்ந்து சுற்றுவது வழக்கம். மேலும் ஒருவர் மோட்டார்சைக்கிளை மற்றொருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கடலூர் சாலையில் உள்ள வணிக வளாக திரையரங்கில் சினிமா பார்க்க தனித்தனி மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர்.
படம் முடிந்து அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது பிரகாசின் மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்தநிலையில் திருட்டு போன மோட்டார்சைக்கிள் தமிழக பகுதியில் இருப்பதாகவும், அதை பெற வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும் என்று செல்வகணபதி பிரகாசிடம் கூறியுள்ளார்.
அவரது பேச்சில் சந்தேகமடைந்த பிரகாஷ் இதுகுறித்து போலீசில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செல்வகணபதியை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வகணபதியே இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
அதாவது பிரகாசின் மோட்டார்சைக்கிளை அவ்வப்போது எடுத்து பயன்படுத்திய செல்வகணபதி அதற்கு மாற்று சாவியும் தயாரித்துள்ளார். அதை தனது நண்பரிடம் கொடுத்து சம்பவத்தன்று சினிமா பார்த்தபோது நண்பரை அழைத்து பிரகாசின் மோட்டார்சைக்கிளை தனது மோட்டார்சைக்கிள் என்று கூறி அதை எடுத்து சென்று தனது வீட்டில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார்.
அதன்பின் நண்பரிடம் பணம் பறிக்கும் நாடகத்தையும் அவர் ஆடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்வகணபதியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story