குடியாத்தம், ஆற்காட்டில் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
குடியாத்தம், ஆற்காட்டில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியாத்தம்,
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறது. கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடியாத்தம் ஆர்.எஸ்.அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினிகளை வழங்கக்கோரி குடியாத்தம் - பள்ளிகொண்டா சாலையில் குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்காட்டில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018-ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளியின் அருகே ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story