குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
பென்னாகரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சின்னம்பள்ளி பகுதி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பென்னாகரம் தொகுதி செயலாளர் பெருமாள் வரவேற்றார். பாப்பாரப்பட்டி பகுதி தலைவர் செல்வராஜ், ஏரியூர் பகுதி தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் மாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அர்ஜூனன், மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், குமார், ரவி, பகுதி செயலாளர்கள் சிவா, சக்திவேல், அன்பு, வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த நாட்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்னாகரம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story