கல்லாவியில் அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு மாணவ, மாணவிகள் அவதி
கல்லாவியில் அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் ஒரே வளாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி என 2 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பள்ளியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் இன்றி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். போதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கு கூட போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
அன்றாட தேவைக்கு ஆசிரியர்கள் மட்டும் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. மேலும் கழிப்பறையிலும் தண்ணீர் இல்லாததால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். துர்நாற்றம் காரணமாக அவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மாணவ, மாணவிகளின் நலன்கருதி கல்லாவி அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு உடனடியாக தண்ணீர் வசதிகள் செய்துதரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அவரால் திறக்கப்பட்டது என்பதும், உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி இந்த அரசு பள்ளியில் தான் படித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story