கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி உதவித்தொகைகோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
இதேபோல் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 25-ந் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை நவம்பர் 30-ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story