காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 3 July 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் ஒருவர் வாழப்பாடியில் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நேற்று அதிகாலையில் செல்போன் கோபுரம் மீது ஏறி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை பார்த்ததும் பொதுமக்கள் இதுபற்றி வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். செல்போன் கோபுரம் மீது ஏறி நின்ற வாலிபரிடம் விசாரித்தனர்.

பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விசாரணையில், அவருடைய பெயர் வடிவேல் (வயது 29) என்றும், சேலம் மாவட்டம் தலைவாசல் காமக்காபாளையத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. வடிவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

போலீசாரிடம் வடிவேல் கூறியதாவது:-

நானும், எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொள்வதற்காக கேரளாவிற்கு சென்றோம். இதை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் என்னிடம் நைசாக பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இதை நம்பிய நாங்கள் ஊருக்கு திரும்பி வந்தோம். பின்னர் இருவரையும் பிரித்து விட்டனர்.

என் காதலியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தோம். தலைவாசல் போலீசிலும் முறையிட்டேன். ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால் செல்போன் கோபுரத்தில் ஏறினேன்.

இவ்வாறு வடிவேல் போலீசாரிடம் தெரிவித்தார்.

அப்போது போலீசார் இதில் நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தனர். இதையடுத்து அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து காலை 8 மணியளவில் கீழே இறங்கி வந்தார்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story