புதுக்கோட்டை அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் கைது


புதுக்கோட்டை அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 3 July 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுக்கோட்டை அருகே உள்ள குமாரகிரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுந்தரவேல். இவரிடம், தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் பர்னாந்து என்பவரின் 59.50 சென்ட் நிலத்தை கூட்டாம்புளி மெயின் ரோட்டை சேர்ந்த ரூபன்பால்ராஜ் (வயது 30), பொன்செல்வராஜ் (65), குலையன்கரிசலை சேர்ந்த சாமுவேல் டேவிட்சன் ஜேக்கப் (34), கூட்டாம்புளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (53), குலையன்கரிசலை சேர்ந்த கண்ணதாசன் (26) உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து ரூ.30 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர்.

இதனை அறிந்த மைக்கேல் பர்னாந்து தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து புகார் மனு புதுக்கோட்டை போலீசுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.

அப்போது, சுந்தரவேல் பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்து கொடுத்து உள்ளார். அதே நேரத்தில் நிலத்தை விற்பனை செய்தவர்கள் ரூ.30 லட்சத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் சுந்தரவேல் தன்னை மோசடி செய்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, மனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை விசாரணை நடத்தி, பணம் மோசடி செய்ததாக ரூபன்பால்ராஜ், பொன்செல்வராஜ், சாமுவேல் டேவிட்சன் ஜேக்கப், பாலகிருஷ்ணன், கண்ணதாசன் ஆகிய 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

Next Story