நீரோடைகள் மாசுபடுவதை தடுக்க, கேரட் கழுவும் எந்திரங்களில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி பொருத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
நீரோடைகள் மாசுபடுவதை தடுக்க கேரட் கழுவும் எந்திரங்களில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவுக்கு மேல் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பட்டாணி, காளிப்பிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஊட்டியில் விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகளுக்கு வெளியிடங்களில் தனி மவுசு உள்ளது.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கேரட் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகள் கேரட்டுகளை தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்து, மூட்டைகளாக சரக்கு வாகனம் மற்றும் லாரிகளில் ஏற்றி கேரட் கழுவும் எந்திரங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு எந்திரத்தில் கேரட்டுகள் கொட்டப்பட்டு, அதில் இருக்கும் மண் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. இதனை தொழிலாளர்கள் தரம் பிரித்து மீண்டும் வாகனத்தில் ஏற்றி ஊட்டி நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மார்க்கெட், மதுரை, நெல்லை மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விளைவிக்கப்படும் கேரட்டுகளை கழுவுவதற்காக ஊட்டி, கேத்தி பாலாடா, கீழ் அப்புக்கோடு, முத்தோரை உள்பட பல்வேறு இடங்களில் கேரட் கழுவும் எந்திரங்கள் உள்ளன. சில பகுதிகளில் விளைநிலங்களை ஒட்டி எந்திரங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கேரட்டுகளை கழுவும் எந்திரங்களில் இருந்து வெளியேறும் மண் கலந்த தண்ணீர் நீரோடைகளில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் அந்த நீரோடையின் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தினால், கேரட் அல்லாத பயிர்களை நோய் தாக்கும் நிலை உள்ளது. மேலும் கேரட் பயிருக்கு பாய்ச்சினால், அவை அழுகி போகும் அபாயம் காணப்படுகிறது. மேலும் நீரோடை தண்ணீர் மாசடைகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே எந்திரங்களில் கேரட்டுகளை கழுவிய பிறகு வெளியேற்றப்படும் மண் கலந்த தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் கேரட்டுகளை கழுவ பயன்படுத்த வேண்டும் என்றும், விளைநிலங்களுக்கு நடுவே செல்லும் நீரோடைகளில் விடக்கூடாது என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரட் கழுவும் எந்திரங்களில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவியை வருகிற 15-ந் தேதிக்குள் பொருத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் நீரோடைகள் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன், தண்ணீர் வீணாகுவது குறைய வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story