பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில், ரூ.90 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு


பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில், ரூ.90 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி,

தேனி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால், கண்மாய்கள் என 30 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.10 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள மேல்மங்கலம் வழங்கு வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாய்க்கால் சீரமைப்பு பணிகள், வராகநதி ராஜவாய்க்கால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வாய்க்கால் மூலம் நேரடியாக 298.79 ஹெக்டேர் நிலமும், மறைமுகமாக 15.10 ஹெக்டேர் நிலமும் என மொத்தம் 313.89 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இந்த வாய்க்காலில், முருகமலை பகுதியில் இருந்து மழைநீர் வடிந்து ஓடும் வாய்க்கால் சந்திக்கும் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொட்டிப்பாலம் வடிவில் ஒரு பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் மழைநீர் செல்லும் வாய்க்காலும், கீழ் பகுதியில் ராஜவாய்க்காலும் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

காலப்போக்கில் இந்த பகுதியில் ராஜவாய்க்காலில் அடித்து வரும் தென்னை மட்டைகள் சிக்கிக் கொண்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் தண்ணீர் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், பழமையான இந்த பாலம் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த தொட்டிப் பாலம் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக பாலம் கட்டப்பட்ட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மேல்மங்கலம் கிராமத்தில் இந்த திட்டப் பணிகள் குறித்து விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். திட்டப் பணிகளை விவசாயிகள் மேற்பார்வையிட்டு, ஒவ்வொரு பணிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பணியில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவியை நாடலாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘இந்த வாய்க்கால் 5 ஆயிரத்து 850 மீட்டர் நீளம் கொண்டது. இது முழுமையாக தூர்வாரப்பட உள்ளது. இருபுறமும் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு சிமெண்டு பூச்சு வேலை செய்யப்பட உள்ளது.

இந்த வாய்க்கால் நேரடி பாசனம் போக, கீழ்நிலை கண்மாய்களான நாராயணன் குளம், சிறுகுளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story