குமாரபாளையம் அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
குமாரபாளையம் அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் மயானத்தை அடுத்து ஒரு ஆண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்தவரின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியான வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் பிணத்தின் அருகில் 3 மோட்டார் சைக்கிள்களும், ஒரு செல்போனும், ரூ.500 மற்றும் ஒரு அரிவாளும் கிடந்தது. இதையடுத்து போலீசார் அந்த செல்போனை எடுத்து, அதில் இருந்து கடைசியாக பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண், தான் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த பிரபாவதி என்றும், இந்த செல்போன் எனது தம்பி அருள்ஜோதியின் (வயது 35) செல்போன் என்றும், அருள்ஜோதி சங்ககிரி அரசு ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்தார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அருள்ஜோதியின் தாய் வசந்தி (63) என்பவரை அழைத்து வந்து விசாரித்தபோது கொலையுண்டவர் அருள்ஜோதி தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட அருள்ஜோதி அவ்வப்போது லாரி டிரைவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். மற்ற நேரங்களில் சீட்டாட்டம், சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ரவுடி போல செயல்பட்டு வந்த அவர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் திருமணம் செய்து கொள்ளாத அருள்ஜோதி, அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு தாயான, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சவுடேஸ்வரி (24) என்ற பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அருள்ஜோதி பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் அவர் மேல் இருப்பதால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சீட்டாட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருள்ஜோதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இடத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் இருந்ததால் 3-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் குமாரபாளையம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story