குடிநீர் குழாய் பதித்த பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்- பள்ளி வேன்; போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் குழாய் பதித்த பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்- பள்ளி வேன்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் பதித்த இடத்தை சரியாக மூடாத காரணத்தால், அந்த பள்ளத்தில் அரசு பஸ் மற்றும் பள்ளி வேனின் சக்கரம் சிக்கி கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் சாலை எம்.ஆர்.நகர் பகுதியில் சாலையோரம் குழாய் பதிக்கப்பட்டது. குழாய் பதித்த பள்ளத்தை ஊழியர்கள் சரிவர மூடாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகே பள்ளி வேன் நிறுத்தப்பட்டு, மாணவர்கள் இறங்கி கொண்டிருந்தனர்.

இந்த வேன் புறப்பட்டு செல்ல முயன்றபோது அங்கிருந்த மூடப்படாத பள்ளத்தில் முன்பக்க சக்கரம் சிக்கி கொண்டது. அப்போது தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ் அந்த வழியாக வந்தது. இந்த பஸ், பள்ளி வேனை கடந்து செல்ல முயன்றபோது அரசு பஸ்சின் முன் சக்கரம் மூடப்படாமல் இருந்த மற்றொரு பள்ளத்தில் சிக்கி கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பஸ்சை எடுக்க முடியவில்லை. பள்ளி வேனும், அரசு பஸ்சும் பள்ளத்தில் சிக்கி கொண்டதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்டவரிசையில் நின்றன.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், உடனடியாக மீட்பு வாகனத்தை வரவழைத்தனர். பின்னர் மீட்பு வாகனம் மூலம், முதலில் பள்ளி வேன் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இதைதொடர்ந்து அரசு பஸ் மீட்கப்பட்டது. மீட்பு பணி நடந்தபோது, சாலையின் இருமருங்கிலும் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அரசு பஸ், வேன் மீட்கப்பட்டதும் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காக குழாய் பதித்த பள்ளங்களை ஊழியர்கள் சரிவர மூடாமல் அதன் மீது மண்ணை போட்டு மூடி சென்றுள்ளனர். இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளம் இருப்பது தெரியாமல் அதனுள் விழுந்து காயம் அடைந்து வருவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த திட்டப் பணிகளை முழுமையாக கண்காணிப்பதோடு, குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சரியாக மூடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story