8-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு சிறுமியை கொல்ல முயன்ற வாலிபர் கைது


8-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு சிறுமியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க மறுத்த சிறுமியை 8-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை ஆரேகாலனியில் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வரும் 13 வயது மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில், கட்டிடத்தின் அருகே ஓட்டல் நடத்தி வரும் 17 வயது வாலிபர் ஒருவர் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமியை பார்ப்பதற்காக உணவு பொருட்கள் கொடுக்க வருவது போல் அடிக்கடி அந்த கட்டிடத்துக்கு சென்று வந்து இருக்கிறார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று சிறுமி மாடியில் இருந்து விழுந்து கட்டிட வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தலையில் பலத்த காயத்துடன் சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, சம்பவத்துக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் சிறுமியை மேற்படி 17 வயது வாலிபருடன் பார்த்ததாக கட்டிட காவலாளி தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் தன்னை காதலிக்க மறுத்ததால் சிறுமியை கொலை செய்வதற்காக 8-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருக்கு வயது 17 என்பதால் டோங்கிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்தநிலையில், இந்த சம்பவத்தில் மகனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story