இறந்துவிட்டதாக கருதி மாதாந்திர உதவித்தொகை நிறுத்தம்: மூதாட்டிக்கு நிலுவைதொகையுடன் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும், ராமநாதபுரம் கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இறந்துவிட்டதாக கூறி மாதாந்திர உதவித்தொகையை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு, நிலுவை தொகையுடன் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக ராமநாதபுரம் கலெக்டர் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுந்தரம்மாள் என்ற மூதாட்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கடந்த 2006–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாதந்தோறும் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தேன். இந்தநிலையில் கடந்த 2015–ம் ஆண்டு திடீரென்று அந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன். இதையடுத்து எனது மனுவை பரிசீலனை செய்ய கமுதி தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். பின்னர் கமுதி துணை தாசில்தாரை தொடர்பு கொண்டபோது எனது பெயர் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நான் இறந்துவிட்டதாக கூறி எனது பெயரை நீக்கிவிட்டதாக தெரிவித்தனர். அதற்கு காரணம் கேட்டபோது சரியான பதில் இல்லை. இதையடுத்து 2017–ம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் முதியோர் ஓய்வூதியம் வழங்கக்கோரி புதிதாக மனு அளித்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடந்த 2006 முதல் 2015–ம் ஆண்டு வரை தரப்பட்ட முதியோர் உதவித்தொகையை, மீண்டும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமுதி தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில், கணினி இயக்கும் தற்காலிக பணியாளர் செய்த தவறினால்தான் மனுதாரருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. தற்போது கள ஆய்வு மேற்கொண்டு மனுதாரருக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
விசாரணை முடிவில், ஊழியர்களின் கவனக்குறைவால் மனுதாரருக்கு கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதில் இருந்து தற்போது வரை கணக்கிட்டு அவருக்கு சேர வேண்டிய நிலுவை உதவித்தொகையை வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனுதாரர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.