கணினி ஆசிரியர் தேர்வு வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததா? ஆசிரியர் தேர்வாணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கணினி ஆசிரியர் தேர்வு வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததா? ஆசிரியர் தேர்வாணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கணினி ஆசிரியர் தேர்வுக்கான வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததா? என்பது தொடர்பான புகாருக்கு ஆசிரியர் தேர்வாணையம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு நானும் விண்ணப்பித்து இருந்தேன். கடந்த மாதம் 23–ந்தேதி நடந்த தேர்வுக்காக நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள மையத்தில் எனக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு சென்றேன். இடைப்பட்ட நேரத்தில் சில தேர்வர்கள் கணினியில் இருந்த விடைகளை குறித்துக்கொண்டு மற்றவர்களிடம் பகிர்வதும், விடைகளுக்கு குறிப்பு எடுப்பதுமாக இருந்தனர். மேலும் சிலர் செல்போன் மூலம் விடைகளை பிறருக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதனால் வினாக்கள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது. போதிய கணினி வசதி இல்லாமல் தேர்வர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இங்கு நடந்த முறைகேடுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த சம்பவம் பல ஊடகங்களிலும் வெளியானது. இதுபோன்ற சூழலால் சில தேர்வு மையங்களில் இரவு 8 மணி வரை தேர்வு நடந்தது. பல மையங்களில் இந்த முறைகேடு நடந்து உள்ளது. ஆனால் 3 மையங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படுவதாக அறிவித்தனர். இது சட்ட விரோதம். மேலும் 2 விதமாக தேர்வு நடத்தினால் தேர்வின் தரம் பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே நடந்து முடிந்த 2 தேர்வுகளின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து, இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த 2 தேர்வையும் ரத்து செய்துவிட்டு, மொத்தம் உள்ள 119 தேர்வு மையங்களிலும் முறையாக மறு தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு சம்பந்தமாக மனுதாரர் கூறியுள்ள புகார்களுக்கு, ஆசிரியர் தேர்வாணையம் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story