தக்கலை அருகே துணிகரம் தொழிலதிபர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை 2 பேர் சிக்கினர்


தக்கலை அருகே துணிகரம் தொழிலதிபர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே தொழிலதிபர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக 2 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளியோடு ஆதாலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 50). தொழிலதிபரான இவர், வெளிநாட்டில் கட்டிட கான்டிராக்டராக உள்ளார். இவருடைய மனைவி லியோ பிரின்ஸ் மினி (48).

இவர்களுக்கு டார்லின் ஜோமி (21), டாரதி ஜோமி (18) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார்கள். இதனால், லியோ பிரின்ஸ் மினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் தன்னுடைய மகளின் திருமணத்துக்கு முன்னேற்பாடாக கட்டில், பீரோ உள்ளிட்ட மர சாமான்களை செய்ய லியோ பிரின்ஸ் மினி முடிவு செய்தார். அதற்காக வீட்டின் முன் நின்ற பலா மரம் வெட்டப்பட்டது.

இந்த பணியில் பள்ளியாடி மற்றும் வில்லுக்குறியை சேர்ந்த 2 பேரை வேலைக்கு அமர்த்தி லியோ பிரின்ஸ் மினியின் வீட்டிலேயே கட்டில், பீரோ செய்யும் பணி நடந்தது. அவர்கள் கடந்த 24-ந் தேதியில் இருந்து தினமும் காலையில் வேலைக்கு வந்து விட்டு மாலையில் தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

லியோ பிரின்ஸ் மினி மட்டும் தனியாக வசித்து வந்ததால் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு பீரோவில் வைக்காமல், 78¼ பவுன் தங்க நகைகளை ஒரு பையில் வைத்து படுக்கை அறையில் ஒரு பகுதியில் மறைத்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் மர வேலைக்கு வந்தவர்கள் வேலையை முடித்து விட்டு சென்றனர். லியோ பிரின்ஸ் மினி இரவு தூங்க செல்வதற்கு முன் படுக்கை அறையில் வைத்திருந்த நகை பையை பார்த்தார். ஆனால் பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நகை பையை தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக லியோ பிரின்ஸ் மினி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நகை பை மாயமான வீட்டுக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது லியோ பிரின்ஸ் மினியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, மர வேலைக்கு வந்தவர்களில் ஒருவர் அடிக்கடி வீட்டிற்குள் சென்று வந்ததாகவும், அவர் நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்றும் லியோ பிரின்ஸ் மினி கூறினார். மேலும் எங்கள் வீட்டில் ஜன்னல் கதவு எப்போதும் பூட்டிதான் இருக்கும். நேற்று இரவு நான் படுக்கை அறைக்கு சென்ற போது ஜன்னல் கதவு திறந்து கிடந்தது என்றும் கூறினார்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் லியோ பிரின்ஸ் மினி வீட்டில் மர வேலை செய்த 2 நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலதிபர் வீட்டில் 78¼ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story