5 நாட்களாக கொட்டிய மழையின் தீவிரம் குறைந்தது : மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது
மும்பையில் 5 நாட்களாக கொட்டிய மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து மெல்ல, மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. ஆனால் 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
மும்பை,
மும்பையில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை 5 நாட்களாக கனமழையாக கொட்டி தீர்த்தது. கடந்த திங்கட்கிழமை இடைவிடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய மழை நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டதுடன் கொத்து, கொத்தாக உயிர் பலியும் வாங்கியது. குறிப்பாக மலாடில் குடிசை பகுதியில் சுவர் இடிந்து 24 பேர் மடிந்தனர்.
சாலைகள், ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. இதனால் நகரின் போக்குவரத்து உயிர் நாடியான மின்சார ரெயில் சேவை முடங்கியதுடன் மாநகராட்சியின் பெஸ்ட் பஸ் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழைக்கு விமான போக்குவரத்தும் தப்பவில்லை. விமான நிலைய பிரதான ஓடுபாதையில் தேங்கிய மழைநீரால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியத்துக்கு பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது. சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கியது. இதையடுத்து மும்பையில் இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்ற 150-க்கும் மேற்பட்ட பெஸ்ட் பஸ்கள் மீட்கப்பட்டன. நேற்று வழக்கம் போல பஸ்கள் இயங்க தொடங்கின. மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 203 பஸ்களில், 2950 பஸ்கள் இயக்கப்பட்டன.
மத்திய ரெயில்வே நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில் சேவைகளை இயக்கியது.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கிய நிலையில் மின்சார ரெயில்களில் காலை நேரத்தில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மத்திய ரெயில்வேயை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
இதையடுத்து, வார நாட்களில் இயக்கப்படுவது போல் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்தது. மேலும் தானே, டோம்பிவிலி வரையிலும் சிறப்பு மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் 2-வது நாளாக நேற்றும் விமான போக்குவரத்து சீராகவில்லை. ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுவதால் பிரதான ஓடுதளம் 2-வது நாளாக நேற்று மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் பரிதவித்தனர். மும்பை ரெயில் நிலையங்களை போல நேற்று விமான நிலையமும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
Related Tags :
Next Story