ஈரோட்டில், வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 நிருபர்கள் கைது
ஈரோட்டில் வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சசிகலா (வயது 43). இவர்கள் கிழிந்த விலையில்லா வேட்டி-சேலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த மாதம் 24-ந் தேதி அவர்கள் 2 பேரும் ஈரோடு ஆசிரியர்காலனியில் உள்ள பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை வழிமறித்து பேசினார்கள்.
அந்த 3 பேரும் பத்திரிகைகளில் நிருபர்களாக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் சீனிவாசன், சசிகலா ஆகியோரிடம் மாதந்தோறும் ரூ.3 லட்சம் மாமூல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் பத்திரிகைகளில் தவறான செய்தி போட்டுவிடுவதாகவும் மிரட்டினார்கள். ஆனால் சீனிவாசனும், சசிகலாவும் உரிய ஆவணங்களுடன் அனுமதி பெற்று கிழிந்த விலையில்லா வேட்டி-சேலைகளை விற்பனை செய்து வருவதாகவும், அதனால் பணத்தை கொடுக்க முடியாது என்றும் கூறினார்கள். அதற்கு அவர்கள் 3 பேரும் சீனிவாசனுக்கும், சசிகலாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிகலா ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பணத்தை கேட்டு மிரட்டியவர்கள் ஈரோடு மாணிக்கம்பாளையம்ரோடு சுப்பிரமணியம்நகரை சேர்ந்த கோபால் (44), ஈரோடு பெருந்துறைரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (42), ஈரோடு ஈ.வி.என்.ரோட்டை சேர்ந்த தனஞ்செயன் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் பத்திரிகைகளில் நிருபர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story