ஐம்பொன் சிலை மாயம் என புகார், ராயப்பன்பட்டியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
ராயப்பன்பட்டியில் உள்ள சண்முகநாதன் கோவிலில் இருந்த ஐம்பொன் சிலை மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் சண்முகநாதன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் விசேஷ நாட்களில் கம்பம், உத்தமபாளையம், நாகையகவுண்டன்பட்டி, ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலில் உற்சவமூர்த்தி சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்றும், அது மாயமாகி விட்டதாகவும், தற்போது உள்ள சிலை பழமைவாய்ந்த சிலை இல்லை என்றும் சுருளி அருவியில் உள்ள ஆதிஅண்ணாமலையார் கோவில் பூசாரியான முருகன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார்.
இதேபோல் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடமும் பூசாரி முருகன் புகார் அளித்தார். அதில் அவர், ‘மிகவும் பழமை வாய்ந்த சண்முகநாதன் கோவிலில் உற்சவமூர்த்தி சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது. இந்த சிலை விழாக்காலங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு பின்பு மீண்டும் கோவிலில் உள்ள பூசாரி பராமரிப்பில் இருக்கும். தற்போது உள்ள உற்சவமூர்த்தி சிலை ஏற்கனவே உள்ள சிலையை விட மாற்றமாக உள்ளது. பழமைவாய்ந்த உற்சவமூர்த்தி சிலை மாற்றப்பட்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஸ்ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் புகார் அளித்த பூசாரி முருகன் மற்றும் அப் பகுதியில் உள்ள சிலரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் சண்முகநாதன் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவிலின் அமைப்பு பற்றியும், விழாக்காலங்களில் சிலை வைக்கப்படும் இடம் மற்றும் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர். போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணை காரணமாக அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story