கோவை ரெயில் புறப்படுவதில் தாமதம், பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை


கோவை ரெயில் புறப்படுவதில் தாமதம், பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை
x
தினத்தந்தி 4 July 2019 4:15 AM IST (Updated: 4 July 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

கோவையில் இருந்து சிறப்பு பயணிகள் ரெயில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு காலை 7.05 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் அதே ரெயில் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு 8.45 மணிக்கு செல்கிறது. இந்த ரெயிலில் பொள்ளாச்சியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் உள்பட தினமும் 900 பேர் சென்று வருகின்றனர்.

வழக்கமாக கோவையில் இருந்து வரும் ரெயிலில் என்ஜினை, திருப்பி கொண்டு வந்து மீண்டும் அதே ரெயிலில் பொருத்தி கோவைக்கு செல்லும். நேற்று காலை வழக்கம் போல் கோவை செல்லும் ரெயிலில் பயணிகள் அமர்ந்தனர். ஆனால் 7.30 மணியை தாண்டியும் ரெயிலை இயக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதிலை கூறவில்ை-லை.

மேலும் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் தமிழ், ஆங்கிலம் மொழியில் பேச முடியவில்லை. இதனால் என்ன பிரச்சினை, எதனால் ரெயில் தாமதம் என்பதை பயணிகளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மொழி பிரச்சினையால் பயணிகள் அதிகாரிகளிடம் பேச முடியாமல் தவித்தனர். அதன்பிறகு அதிகாரிகள் ரெயில் என்ஜினை, 3-வது பிளாட்பாரம் வழியாக திருப்பி வந்து, 1-வது பிளாட்பாரத்தில் நின்ற கோவை ரெயிலில் பொருத்தினர்.

அதை தொடர்ந்து பயணிகள் ரெயிலில் அமர்ந்தனர். பின்னர் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு கோவைக்கு 9.15 மணிக்கு சென்றது. ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றதால், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-கோவை சாலையில் ஈச்சனாரி, உக்கடம், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் பஸ் மதுக்கரை, குனியமுத்தூர் வழியாக சுற்றி செல்கிறது. இதனால் கோவைக்கு செல்ல கூடுதல் நேரமாகிறது. இதன் காரணமாக காலை நேரங்களில் கோவைக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், ரெயிலை ஓட்டி வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை காரணம் காட்டி கோவை ரெயிலுக்கு என்ஜினை பொருத்தவில்லை. அமிர்தா எக்ஸ்பிரஸ் 3-வது பிளாட்பாரத்தில் தான் வரும். கோவை ரெயில் 1-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும். எனவே என்ஜினை 2-வது பிளாட்பாரம் வழியாக கொண்டு வந்து ரெயிலில் பொருத்தி இருக்கலாம். ஆனால் அதிகாரிகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாததால் ரெயிலை தாமதமாக இயக்கினர்.

இதற்கிடையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்கள் வடமாநில அதிகாரிகள். அவர்கள் ஆங்கிலம், தமிழ் மொழி பேசுவதில்லை. ஆனால் இந்தி, மலையாளத்தில் நன்றாக பேசுகின்றனர். தமிழ் தான் தெரியாது என்று ஆங்கிலத்தில் பேசினால், நம்மை இந்தியில் பேச சொல்லுகின்றனர். இதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மொழி பிரச்சினையால் திருமங்கலத்தில் ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட நேர்ந்தது. அதன்பிறகு ரெயில்வே கேட்டில் பணிபுரியும் ஊழியர் அளித்த தகவல்கள் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதே நிலைமை தான் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நிலவி வருகின்றது. படித்தவர்களால் கூட அவர்களிடம் இருந்து எந்த தகவலும் பெற முடியாத நிலையில், ஏழை, எளிய மக்களால் எப்படி அவர்களிடம் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவைக்கு ரெயில் தாமதமாக சென்றது. இதனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தமாகி விட்டது. பாலக்காடு கோட்டத்தில் இருந்து பொள்ளாச்சியை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. எனவே கோவை ரெயிலை நிரந்தரமாக்கி, சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். மொழி பிரச்சினை ஏற்படாமல் இருக்க தமிழ் தெரிந்த அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story