கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்பூங்கா கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்


கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்பூங்கா கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
x
தினத்தந்தி 4 July 2019 4:08 AM IST (Updated: 4 July 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே அமைய உள்ள தொழிற்பூங்காவுக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா மாநல்லூர் மற்றும் சூரப்பூண்டி கிராமங்களில் சுமார் 286 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் சிப்காட் நிறுவனம் மூலம் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களின் கருத்து கேட்பு கூட்டம் மாதர்பாக்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிப்காட் நிறுவனம் சார்பாக அளிக்கப்பட்ட விளக்க உரையில், ரூ.250 கோடி செலவில் அமைய உள்ள தொழிற்பூங்காவில் சாய மூலப்பொருட்கள், மருத்துவ மூலப்பொருட்கள், பிளாஸ்டிக் உற்பத்திக்கான ரசாயன மூலப்பொருட்கள், உயிர் கொல்லிக்கான மூலப்பொருட்கள் மற்றும் பெயிண்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அமைய உள்ள தொழிற்சாலைகளில் பசுமை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், இந்த தொழிற்பூங்கா திட்டத்திற்காக அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக தேவைப்படும் தண்ணீருக்காக இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு எதுவும் அமைக்கப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதே சமயத்தில் சென்னை மெட்ரோ வாட்டரில் இருந்து குழாய் மூலம் தேவையான தண்ணீரை தொழிற்பூங்காவிற்கு எடுத்துவரவும் திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் விளக்க உரைக்கு பின்னர் கிராம மக்களின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது கிராமப்பகுதியில் ஒரு தொழிற்பூங்காவை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிற்சாலைகளின் கழிவுகளால் சுற்றி உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மாசுபடும். இங்கு இருந்து சற்று தொலைவில் தான் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை தொழிற்பூங்கா ஆகியவை உள்ளன.

அங்கு உள்ள தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீரும் சுரண்டப்பட்டு வருகிறது. அதற்கே இதுவரை எந்த தீர்வும் காணாத நிலையில் அருகே பசுமை நிறைந்த மூன்று போகம் விளையக்கூடிய நிலங்களை கொண்ட கிராமங்களின் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தொழிற்பூங்கா தேவையில்லை என கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களில் சிலர் பாதியிலேயே எழுந்து சென்றனர்.

இதுதவிர சென்னையிலேயே தண்ணீர் இல்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து தொழிற்பூங்காவிற்கு அதுவும் குழாய் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் மெட்ரோ தண்ணீர் கொண்டு வருவது என்பது சாத்தியமா? இது, நாளடைவில் இங்கு உள்ள நிலத்தடி நீரை பாழ்படுத்தும் செயலாக அமையும்.

இந்த தொழிற்பூங்காவால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களின் மீள் குடியேற்றம் தான் நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:–

கிராம மக்களின் கருத்துகள் அனைத்தும் முழுமையாக ஒலி மற்றும் ஒளி பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அதற்குரிய வழிவகை தீர்வுகள் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story