காஞ்சீபுரத்தில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை; ஆட்டோவை போலீஸ் அனுமதிக்காததால் விபரீதம்
காஞ்சீபுரம் நகருக்குள் ஆட்டோக்களை அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த ஆட்டோ டிரைவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்காக காஞ்சீபுரம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகர்ப் பகுதிக்குள் உரிய அனுமதி பெறாத எந்த ஒரு வாகனங்களும் போலீசாரால் அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் தனியார் மற்றும் அரசு மினி பஸ்கள் மட்டும் போலீசாரால் நகர்ப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறது.
நகர்ப்பகுதிக்குள் இயங்கிவரும் ஷேர் ஆட்டோக்கள், காஞ்சீபுரம் நகர்ப்பகுதிக்குள் வருவதற்கு அனுமதி அட்டை பெற்ற பிறகும் சோதனைச்சாவடியை தாண்டி போலீசார் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் வருமானம் இன்றி தவித்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தொடர்ச்சியாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்கிற ஷேர் ஆட்டோ டிரைவர் குடும்ப கடன் சுமை மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் ஷேர் ஆட்டோவில் வருமானம் இழந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் மது குடித்ததாக தெரிகிறது.
பின்னர் காஞ்சீபுரம் வாலாஜாபாத் சாலை முத்தியால்பேட்டை பகுதியில் சாலை நடுவே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு போலீசாரின் கண்முன்னே தற்கொலைக்கு முயன்றார். சம்பவத்தை பார்த்த போலீசாரும், அப்பகுதியினரும் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவை போலீசார் அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காஞ்சீபுரம் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேற்கு ராஜகோபுரம் வழியாக பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பலர் மேற்கு ராஜகோபுரம் அருகே வந்து உள்ளே நுழைய முயன்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சில போலீசார் அந்த தெருவில் வசிக்கும் மக்களையும் செல்ல விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தெரு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சப்–கலெக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த தெருவில் வசிக்கும் மக்கள் தடுக்கப்படமாட்டார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.